Blog

Love For Ever|இயற்கையோடு உறவாடு .

இயற்கையை நேசி ! இன்பத்தை சுவாசி !!
This image has an empty alt attribute; its file name is Green-solution.jpg
இயற்கையோடு உறவாடு ..

கருவறை முதல் கல்லறை வரை வாழ்வியல் முறைகள்அனைத்தும் இயற்கையை சார்ந்தே அமைந்து இருந்தது. நிலம், நீர்,காற்று என அனைத்தையும் கடவுளாக வைத்து வழிபட்ட, நமது முன்னோர்கள் ஆலமரம், அரசமரம், வேப்பமரம், வில்வம் என கோவிலுக்கு ஒரு மரத்தை வைத்து ஸ்தல விருட்சமாக வணங்கி விழா எடுத்தனர்.

கதைகளும், காவியங்களும் அதை ஒட்டியே எழுதப்பட்டன. மரங்களே மழையின் விதைகள் என்பதை உணர்ந்த நமது முன்னோர் காடுகளை காப்பாற்றி தலைமுறையை வாழ்வித்தனர். சுகாதாரமான மேம்பட்ட சூழலில் இயற்கையுடன் இணைந்தே வாழ்ந்தனர்.

ஆனால் நாகரீக வளர்ச்சியிலும், பொருளாதார தேவையின் பொருட்டும் மனிதன் கிராமத்தை விட்டு இடம் பெயர்ந்து நகர பகுதிக்கு வந்தான். கால மாற்றத்திலும், குடும்பச் சூழலிலும் இயற்கையுடனான அவனது உறவில் விரிசல் ஏற்பட்டது. மீன் பிடித்து சாப்பிட்ட குளமும், ஏரியும், கண்மாயும் நீரில்லாமலும், மணல் இல்லாமலும் சூழல் மாறுபாட்டில் சுடுகாடுகளாக மாறிவிட்டன.

கடைமடை வாய்க்கால் இருந்த சுவடே தெரியாமல் மறைந்து விட்டது. உலக விஞ்ஞானிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலமுறை எச்சரித்த பின்பு தற்போது, அரசும் சூழல் காக்கும் திட்டங்களை செயல்படுத்த தொடங்கியுள்ளது. பிளாஸ்டிக் பைகள் தடையும், தூய்மை இந்தியா திட்டமும் அதற்கு ஒரு முன்னோட்டமாக எடுத்து கொள்ளலாம்.

ஒரு தனி நபரின் பொருளாதார வளர்ச்சிக்காக இயற்கையை சிதைத்தல் தவிர்க்கப்படவேண்டும். எந்திர மயமாதலும், புகையும், இரைச்சலும் சிட்டுக்குருவிகள், பூச்சிகளை மட்டுமல்ல நம்மையும் பாதித்து வருகின்றன. மனித தேவைகளை தாண்டி இப்போது விளம்பர திருப்தியே மாசு படிந்த உலகத்தை உருவாக்கி மாய சமூகத்தை உருவாக்கியுள்ளது. நாம் செயற்கை மீது பேராசை பட்டு உயிர் மண்டலத்தை சிதைத்து விட்டோம். ஏறக்குறைய நாம் உலக இயற்கையை முழுவதுமாகவே ஆக்கிரமித்து பயன் படுத்தி விட்டோம்.

காடுகள் மழையை தருவதுடன் மண் அரிப்பினைத்தடுக்கிறது. பூமியின் தட்ப வெப்பநிலையையும் பாதுகாத்து மழை தரும் கடவுளாக உள்ளது. மனிதனை தாக்கும் நோய்க்கான மருந்துகளில் 75 சதவீதம் காடுகளில் இருந்தே கிடைக்கின்றது. பெருகி வரும் மக்கள் தொகையும், மனிதனின் கலாச்சார மாற்றமும் தான் இயற்கையின் இடர்பாடுகளுக்கு காரணம்.

உணவு முறை மாற்றத்தால் சத்தான நமது அரிசி, சோளம், கம்பு, கேழ்வரகு ,திணை குறைந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பீட்சா, புரோட்டா என மைதாவில் தயாரிக்கப்படும் உணவுமுறைகள் அதிகரித்தது விட்டன. சில இடங்களில் இயற்கை அங்காடிகள் மூலம் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், உணவுபொருட்கள் விற்பனை தொடங்கியுள்ளது, நல்ல மாற்றமாகும்.

இயற்கையை பாதுகாப்பதற்கு தொழில் ரீதியான உற்பத்தியை குறைக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் மாசுபடுத்தாத வழிகளை பயன்படுத்த வேண்டும், இதனால் இயற்கை பாதுகாப்புடன் மனித தேவையும் பூர்த்தியாகும். மனிதனும் இயற்கையும் சீரான இடைவெளியில் ஒரு ரெயில் தண்டவாளம் போல இணைந்திருப்பது தான் சமூகத்திற்கும் நமக்கும் நல்லது. இயற்கையை பாதுகாத்து நாட்டை காப்பதுடன் நாமும் இனிமையாக வாழ்வோம்.

Shopping Cart
Open chat
Nannilam Organics
Nannilam Organics
Hi,
Welcome to Nannilam Organics